தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
'தனி ஒருவன்', 'ஆம்பள', 'அரண்மனை' உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார். 'மீசையை முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 'கடைசி உலகப் போர்' எனும் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார்.
இந்த நிலையில், 'கடைசி உலகப்போர்' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அப்படத்தின் BTS புகைப்படங்களை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டு உள்ளார். BTS புகைப்படங்களை வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி அடுத்த பட அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கடைசி உலகப்போர்' வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. சில சமயங்களில் நாம் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்கள் ஒரு படி தூரத்தில்தான் இருக்கும். இந்தப் படம் எனக்கு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளது. இது எப்போதும் எனக்கு ஒரு சிறப்புப் படமாக இருக்கும். மிகவும் உற்சாகமான ஒன்றுக்குத் தயாராகி வருகிறேன். விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி பதிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


