TamilsGuide

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதி அநுர

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி, ஜப்பானின் மாட்சிமைமிகு பேரரசரை சந்தித்துப் பேசவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வம்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் உச்சிமாநாட்டுச் சந்திப்பொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், முக்கிய ஜப்பானிய வணிகங்கள் மற்றும் டோக்கியோவில் உள்ள முதலீட்டாளர்களின் உயர் மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வணிக மன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

“எக்ஸ்போ 2025” இல், இலங்கைத் தினத்தின் வைபவத்திற்கான ஜப்பான் அரசாங்கத்தின் விருந்தினராக, “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்விலும் ஜனாதிபதி திசாநாயக்க கலந்து கொள்வார். இந்நிகழ்வு சர்வதேச பார்வையாளர்களுக்கு இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பொருளாதார இயலுமையை முன்னிலைப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜப்பானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினரிடமும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி திஸாநாயக்கவின் இவ்விஜயத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

ஜப்பான் விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை மேலும் பலப்படுத்துவதுடன், மென்மேலும் விரிவுபடுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment