TamilsGuide

மக்கள் திலகத்தின் 100 வது படம் ஜெமினியின் ஒளிவிளக்கு

(வெளியான நாள் செப் 20 1968). மக்கள் திலகத்தின் 100 வது படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த அந்த நேரத்தில் வெளிவந்தது இந்த அறிவிப்பு. ஜெமினியின் முதல் வண்ணப்படத்தில் மக்கள் திலகம் நடிக்கிறார் அதை "எங்க வீட்டுப் பிள்ளை" இயக்குநர் சாணக்யா இயக்குகிறார் என்றவுடன் ரசிகர்களுக்கு காற்றில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு.  
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகளாக வந்து கொண்டிருந்தது. புதுப்புது செய்திகளையும் புதுப்புது ஸ்டில்களையும் தாங்கி வெளிவந்த 'திரையுலகம்' பத்திரிக்கைக்காக எம்ஜிஆர் மன்றத்தில் காத்திருந்த நாட்கள் அவை. படம் செப் 20 வெளியான போது ஊரில் பாதி திரையரங்கத்தில்தான் குழுமி இருந்தது. 100 வது படத்தை வரவேற்க டெலிவிஷன் மாதிரி அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி எம்ஜிஆரின்
100 வது படம் என்று புதுமையாக வைத்தது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
தியேட்டர் வாசலில் ஒலிபெருக்கி "ஒளிவிளக்கி"ன் பாடலை இசைத்துக்கொண்டிருந்தது. முதல் 10 நாட்கள் தியேட்டர் வழியே சென்ற  போக்குவரத்தை(traffic) நிறுத்தி வேறு வழியில் திருப்பி விட்டார்கள். முதல் காட்சிக்கு டிக்கெட் வைத்திருந்தவர்கள் விமான பயணத்துக்கு போவதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். முதல் காட்சி நடைபெறும் போதே டிக்கெட் கிடைக்காதவர்கள் எண்ணிக்கை மேலும் பல காட்சிகளை நிரப்பும் அளவுக்கு இருந்தது.
அத்தகைய முதல் காட்சியில் நானும் இருந்தேன் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில்.  முதல் நாளே தெரிந்து விட்டது படம் 50 நாட்களை எளிதில் தாண்டி விடுமென்று.  நினைத்தது நடந்தது.
ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் இவ்வளவு பெரிய வெற்றிப் படம் ஏன் தமிழகத்தில் மூன்று திரையரங்குகளில் மட்டும் 100 நாட்கள் ஓடியது? இலங்கையையும் சேர்த்தால் 7 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு இலங்கையில் பல வெளியீடுகளில் 100 நாட்களை தாண்டி சாதனை செய்தது. அதிகபட்சமாக இலங்கையில் இரண்டு திரையரங்குகளில் 169 நாட்கள் ஓடி வெள்ளி விழாவை 6 நாட்களில் தவறவிட்டது. தமிழகத்தில் சுமார் 15 திரையரங்குகளில் 75 நாட்களை கடந்த "ஒளிவிளக்கு" மூன்று திரையரங்குகளில் மட்டும் 100 நாட்கள் கண்டது. அதுவும் தியேட்டர் காரர்களே விரும்பியதால் தான்.
15 திரையரங்குகளில் 75 நாட்களை கண்ட ஒரு திரைப்படம் குறைந்த பட்சம் 10 திரையரங்குகளிலாவது 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். மாற்று நடிகரின் கூடாரமாக இருந்திருந்தால் சுமார் 15 திரையரங்குகளில் 100 நாட்களை காண செய்திருப்பார்கள். சென்னை பிராட்வேயில் 98 நாட்களில் படத்தை தூக்கி தலைநகரில் 100 நாட்களை

காணாமல் செய்து விட்டார்கள். வேலூரில் 2 தியேட்டரில் வெளியாகி ஒன்றில் 80 நாட்களும், மற்றொன்றில் 62 நாட்களும் ஆக மொத்தம்  ஓடிய கணக்கு 142 நாட்கள் ஆனது..
சுமார் 60 திரையரங்குகளை தாண்டி 50 நாட்கள் ஓடிய படம் "ஒளிவிளக்கு" ஒன்றே. பெங்களூரையும் சேர்த்தால் மொத்தம் 63 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்த படம் "ஒளிவிளக்கு".  "குடியிருந்த கோயில்" சுமார் 20 திரையரங்குகளில் 50 நாட்களை தாண்டிய படம்.  அதே நேரம் 15 தியேட்டரில் 75 நாட்களை கடந்த "குடியிருந்த கோயில்" 10 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் 3 திரையரங்கில் மட்டுமே 100 நாட்கள். காரணம்
தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் முரண்பட்டதால்.  
முதல் வெளியீட்டிலேயே "ஒளிவிளக்கு" 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி முத்திரை பதித்தது.       13 தியேட்டரில் 50 நாட்களை ஓட்டிய மாற்று நடிகரின் 100 வது படத்தை 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டி விட்டார்கள். சென்னை அகஸ்தியாவை தவிர(அக் 26 ல் வேறு படம் புக் ஆனதால்)  60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய "ஒளிவிளக்கு" 3 திரையரங்கில் மட்டும் 100 நாட்கள் கண்டது ஏன்?.  நெல்லையில் குறுகிய காலத்தில் ரூ1 லட்சத்தை தாண்டி அதிக வசூல் பெற்ற படம் "ஒளிவிளக்கு"தான்.
சென்னையில் "ஒளிவிளக்கு" 100 நாட்கள் ஓடாமலே(928171.28) அதிக வசூல் பெற்று "எங்க வீட்டுப் பிள்ளை"யின் 100 நாட்கள் வசூலை(923519.40) தாண்டிய படம். மக்கள் திலகத்தின் 100 வது படத்தை பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆவதை தடுத்து விட்டார்கள்.  மொத்தம் ஓடிய திரையரங்குகளை கணக்கில் எடுத்தால் 1968 ன் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படம் "ஒளிவிளக்கு"தான் என்பது புலனாகும். மதுரையில் 21 வாரங்கள் ஓடி வெள்ளி விழாவை 4 வாரங்களில் தவறவிட்டது.
ஆனால், இலங்கையில் "ஒளிவிளக்கு" 169 நாட்கள் கண்டது. இரண்டாவது, மூன்றாவது, மற்றும் நான்காவது வெளியீடுகளில் 100 நாட்களை கடந்து சாதனை செய்தது.
இன்றளவும் டிஜிட்டல் செய்வதற்கு அதிக விலை கேட்கும் படங்களில் "ஒளிவிளக்கு" முதன்மையானதாக இருப்பதை நாம் காண்கிறோம்.
இன்று படம் வெளியாகி 54 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆண்டுகள் செல்ல செல்ல "ஒளிவிளக்கி"ன் ஒளி வெள்ளம்  பெருகிக் கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம். வேறு எந்த நடிகரின் 100 வது படமும் இதுபோன்ற மகத்தான சாதனை செய்தது கிடையாது என்பது திண்ணம்.❤️❤️

 

Leave a comment

Comment