TamilsGuide

நடிகர்- நடிகைகள் மீது அவதூறு பரப்பினால் சிறை- நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்க 69-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று நடந்தது.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த கலைஞர்கள் டெல்லி கணேஷ், சரோஜா தேவி, ராஜேஷ், மனோஜ் கே.பாரதி, ரோபோ சங்கர் உள்பட 70-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகைகள் லதா, லட்சுமி, கோவை சரளா உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பொதுச் செயலாளர் விஷால் வரவேற்றார். 2024-25-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை துணைத்தலைவர் கருணாஸ் வாசித்தார்.

மூத்த கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு 5 உறுப்பினர்களுக்கு சங்கர தாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நடிகர் சங்க கட்டிட பணிகள்

கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் நிதிநிலை குறித்து பொருளாளர் கார்த்தி பேசினார்.

நிர்வாக செயல்பாடுகள், சங்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் விஷால் பேசினார்.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் பழம்பெரும் நடிகை எம் .என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பத்மபூஷன் விருதுபெறும் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்களின் நலனுக்காகவும் அனைத்து வகையிலும் ஆதரவளித்து உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்க உறுப்பினரும், துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிம்பொனி இசை அமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் அம்பிகா, ரேகா, வடிவேல், ஸ்ரீமன், முத்துக்காளை, கானா பாலா, சாய் தன்சிகா, தங்கதுரை மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் பூச்சி முருகன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்காதது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

சமூக வலைதளங்களில் செயல்படும் யூடியூப் சேனல்களில், நமது சங்கத்தை பற்றியும், நமது சங்க உறுப்பினர்கள் பற்றியும் அவதூறான செய்திகளை பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.

மன உளைச்சலுக்கு உள்ளான நமது சங்க உறுப்பினருக்கு அந்த நபர் ரூ.3 லட்சம் மான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்.

அவதூறு செய்தியை பதிவேற்றம் செய்யும் சமூக வலைத்தள சேனல் நிறுவனம் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
 

Leave a comment

Comment