TamilsGuide

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை இரவு அமெரிக்காவுக்குச்  செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

எதிர்வரும் 24 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி தனது உரையில், இலங்கை அடைந்துள்ள அண்மைய முன்னேற்றங்கள், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் வெளிவிவகாரக் கொள்கை ஆகியன தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்

இதேவேளை ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் ஓசாகா நகருக்கு செல்லவுள்ளார்

உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் கலாசாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பலங்களை வெளிப்படுத்தும் சர்வதேச நிகழ்வான ‘எக்ஸ்போ 2025’ சர்வதேச கண்காட்சியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment