TamilsGuide

ஐ.நா.வின் காசா போர் நிறுத்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் மூலம் தோல்வி அடையச் செய்த அமெரிக்கா

காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

தீர்மானத்தின்படி, காசாவில் உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

ஆனால், இதை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் அமெரிக்கா இதேபோல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஆதவராக முந்தைய தீர்மானத்தையும் தோல்வி அடைய செய்தது.

ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி அமெரிக்கா தீர்மானத்தை நிராகரித்தது.

காசாவில் இஸ்ரேலின் புதிய தரைவழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பஞ்சம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்ததற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில், ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது வருத்தமளிக்கிறது என்று கூறினார். மேலும், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த தீர்மானத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் தூதர், "இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் பிணைக்கைதிகளை விடுவிக்கவோ அல்லது பிராந்தியத்திற்கு பாதுகாப்பைக் கொண்டுவரவோ உதவாது" என்று தெரிவித்தார்.

வரும் வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment