TamilsGuide

ஆப்கானிஸ்தான் சிறையில் வாடிய இங்கிலாந்து தம்பதி விடுதலை

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் எட்டு மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர் விடுவிக்கப்பட்டனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்தில் பீட்டர் ரெனால்ட்ஸ் (80) மற்றும் அவரது மனைவி பார்பி (76) வசித்து வந்தனர். அங்கு கல்வி மற்றும் பயிற்சி அமைப்பை அவர்கள் இணைந்து நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியே சென்று வீடு திரும்பும் போது காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி மேற்கு நாடுகள் வலியுறுத்தி வந்தன. மேலும் ரெனால்ட்ஸ் தம்பதியை விடுதலைச் செய்ய தலிபான்களிடம் கத்தார் அரசு மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் பல தரப்பின் தொடர் வலியுறுத்தலின் பேரில் பீட்டர் மற்றும் அவரது மனைவி பார்பீ ஆகியோரை தலிபான் அரசு தற்போது விடுதலைச் செய்துள்ளது.

அவர்கள் இருவரும், நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் ஆப்கானிஸ்தான் சட்டத்தை மீறியதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான வைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

அமெரிக்க படைகள் வெளியேறிய பின் கடந்த 2021 இல் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசாங்கத்தை இங்கிலாந்து அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment