கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் முக்கிய பதவிகள் வகித்த மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு உயர் ராஜதந்திர பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் தூதரகப் பதவிகளை ஏற்க உள்ளனர் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டின் தொடக்கத்துக்கு முன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பில் பிளேர், இங்கிலாந்துக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளார்.
முன்னாள் நீதியமைச்சர் மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னியின் முதன்மை செயலாளர் டேவிட் லமேட்டி, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தூதராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஜோனாதன் வில்கின்சனுக்கு, ஐரோப்பிய ஒன்றிய தூதராக ப்ரஸ்ஸல்ஸில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் இன்னும் அந்த வாய்ப்பை ஏற்கலாமா என ஆலோசித்து வருகிறார்.
இந்த மூவரும் சேர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேல் ட்ரூடோ அமைச்சரவையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் துணை பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட் உக்ரைன் மறுசீரமைப்புக்கான கனடாவின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட உள்ளார்.


