யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, பொலிசாரின் கோரிக்கையை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு தீவகத்தில் இடம்பெற்றிருந்த படையினரின் இராணுவ நடவடிக்கையின்போது மண்டை தீவுப் பகுதியில் அதிகளவான பொதுமக்கள் கொலல்லப்பட்டிருந்தாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்ட மக்களின் சடலங்கள், அங்குள்ள தேவாலயக் காணியில் அமைந்துள்ள கிணறு உட்பட மேலும் மூன்று கிணறுகளில் போட்டப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே குறித்த கிணறுகளைச் சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கினை சில மத குருமார்கள் இணைந்து தாக்கல் செய்திருந்ததுடன் வழக்கு விசாரணை நேற்று யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் ஊர்காவற்துறை பொலிசாரிடம் அகழ்வு பணியை மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லை என சுட்டிக்காட்டியதை அடுத்து யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் வழக்கு பாரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் குறித்த மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு தொடர்பாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கால அவகாசம் கோரியதால் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


