இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது.
பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம். இதில் 3-வது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தநிலையில் போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11-ந்தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25-ந் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன்.
அப்போது மோதல் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.
இந்தியா எந்த 3-ம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது. பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையில் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து மூலம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பது மேலும் உறுதியாகி உள்ளது.


