கனடாவிலிருந்து தாம் நாடு கடத்தப்பட்டால் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் மரணம் உறுதி என பிரபல விளையாட்டு வீரர் தமாரி லிண்டோ உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக்கில் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்கேற்க கனவு கண்ட 21 வயது தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பம் நாடுகடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
“எங்களை ஜமைக்காவிற்கு திருப்பினால் நிச்சயமாக மரணம் தான் காத்திருக்கிறது” என தாமரி தெரிவித்துள்ளார்.
லிண்டோ குடும்பம் 2019-ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தது.
தமாரியின் தந்தை ஜார்ஜ், ஜமைக்காவில் எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் நடவடிக்கைகளுக்காக தாக்குதல்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் உள்ளானதாகவும், மூன்று முறை கொலை முயற்சிகளில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
தமாரி 15 வயதில் இருந்தபோது குடும்பத்திற்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும், பள்ளிக்கு செல்லும் வழியில்கூட துப்பாக்கிச் சூடு மிரட்டல் சந்தித்த அனுபவம் தான் வாழ்க்கையின் மிகுந்த மன உளைச்சலான தருணமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
கனடாவிற்கு வந்த பிறகு தமாரி நாட்டின் முன்னணி தடைத்தாண்டல் ஓட்ட வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். தற்போது யார்க் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறார்.
23 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கனடாவின் முதனிலை வீரராக திகழ்கின்றார்.
ஆனால் அவரது சாதனைகளும், ஒலிம்பிக் கனவும் இப்போது ஆபத்தில் உள்ளன. கனடா எல்லை சேவை முகமை (CBSA) குடும்பத்தை செப்டம்பர் 22 ஆம் திகதி நேர்முகத்தேர்வுக்கு அழைத்துள்ளது.
அதன்பின் விரைவாக நாடுகடத்தல் நடைமுறை தொடங்கப்படலாம் என சட்டத்தரணி எச்சரித்துள்ளார்.


