TamilsGuide

அறம் சுமந்த ஒருவனது வரலாறு படையாண்ட மாவீரா திரைப்படம் - இயக்குனர் கௌதமன்

வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.

வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ''வ. கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.

இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.

மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.

ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், '' ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் 'படையாண்ட மாவீரா'.

இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.

என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.

தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.

அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார். 
 

Leave a comment

Comment