பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் பிரான்சுவா பைய்ரோ தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளை அறிமுகம் செய்த நிலையிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. சற்றொப்ப 44 மில்லியன் ஈரோ நிதியை மீதப்படுத்துதல், வருடாந்த பொது விடுமுறை தினங்களில் இரண்டு நாட்களைக் குறைத்தல் உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளைத் தாங்கிய புதிய சட்டமூலத்துக்கு எதிராக 364 வாக்குகளும் ஆதரவாக 194 வாக்குகளும் அளிக்கப்பட்டன. செப்டெம்பர் 8ஆம் திகதி நடைபெற்ற இந்த வாக்களிப்பில் 19 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கூட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
577 உறுப்பினர்களைக் கொண்ட பிரெஞ்ச் நாடாளுமன்றில் ஆளுங் கட்சியை விடவும் அதிக பலம் கொண்டவையாக எதிர்க் கட்சிகளே உள்ளன. ஆளுங் கட்சிக் கூட்டணிக்கு 213 ஆசனங்களும், எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு 364 ஆசனங்களும் உள்ளன. 126 ஆசனங்களுடன் நாடாளுமன்றில் மிகப் பெரிய கட்சியாக மரி லு பென் தலைமையிலான வலது சாரி தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியே விளங்குகின்ற போதிலும், தனது அரசியல் எதிரியான லு பென் ஆட்சிக் கதிரையில் அமரக் கூடாது என்ற ஒரே நோக்குடன் அவரது கட்சிக்கு வாய்ப்பை வழங்குவதை மறுத்து, சிறிய கட்சிகளுக்கு அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பை மக்ரோன் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். தனது தந்திரோபாயம் வெற்றியளிக்கவில்லை என்பதை அனுபவத்தில் பல தடவைகளில் தெரிந்து கொண்டுள்ள போதிலும் அதனை மாற்றிக் கொள்ள மக்ரோன் தயாராக இல்லை என்பதையே அவரது அடுத்தடுத்த நகர்வுகள் வெளிக்காட்டி நிற்கின்றன.
1958இல் அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் யாப்புக்கு அமைய அமைக்கப்பட்ட 5ஆவது பிரான்ஸ் குடியரசின் வரலாற்றில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும். அதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் பதவியை இழக்கும் நான்காவது பிரதமராக பைய்ரோ உள்ளார். அது மாத்திரமன்றி, ஒரு வருட கால இடைவெளியினுள் மூன்று பிரதமர்கள் பதவியை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1958 முதல் இன்று வரை பிரான்சில் 28 பிரதமர்கள் பதவியேற்று உள்ளனர். இவர்களுள் தனது முழு பதவிக் காலத்துக்கும் பதவி வகித்தவராக ஒருவரே உள்ளார். 1962 ஏப்ரல் 14ஆம் திகதி பதவியேற்ற ஜோர்ஜ் பொம்பிடு 1968 யூலை 10 வரை பதவி வகித்துள்ளார். 6 வருடங்களும் 87 நாட்களுமாக இவர் பதவி வகித்த காலப் பகுதியில் 4 அரசாங்கங்களை அமைக்க வேண்டிய நிலையில் அவர் விளங்கினார் என்பது தனியான கதை. இந்த வரிசையில் 2024 செப்டெம்பர் 5ஆம் திகதி பதவியேற்ற மைக்கல் பேர்னியர் 99 நாட்கள் மாத்திரமே பதவியில் நீடிக்க முடிந்தது.
கடுமையான அரசியல் நெருக்கடியில் பிரான்ஸ் சிக்கித் தவிக்கும் நிலையில் புதிய பிரதமராக, தற்போதைய பாதுகாப்பு அமைச்சரான செபஸ்டின் லெக்கோர்னுவை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நியமித்துள்ளார். 10ஆம் திகதி புதன்கிழமை அவர் பிரதமராக நியமிக்கப்பட்ட தினத்தில், தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அடுத்த மாதத்தில் புதிய வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டிய சூழலில், அவரது ஆட்சிக் காலம் அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிராத நிலையில், புதிதாக அமையும் எந்தவொரு அரசும் 'நித்திய கண்டம், பூரண ஆயுசு' என்ற நிலையிலேயே ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டிய சூழல் உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள லெக்கோர்னு எந்த விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லவுள்ளார் என்பதை அடுத்துவரும் நாட்கள் நமக்குக் காட்டிவிடும்.
அதேவேளை, பிரான்ஸ் வரலாற்றிலேயே மக்களிடம் அதிகம் செல்வாக்கு இழந்த ஜனாதிபதியாக மக்ரோன் அறியப்படுகின்றார். அவரது மக்கள் செல்வாக்கு 85 விழுக்காடாக வீழ்ச்சி கண்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. உள்நாட்டுக் கொள்கைகளில் மாத்திரமன்றி வெளிநாட்டுக் கொள்கைகளைக் கையாளுவதிலும் அவரது வல்லமை பற்றி மக்களிடையே அதிருப்தி நிலவுவதைப் பார்க்க முடிகின்றது.
அண்மைக் காலமாக பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது. செப்டம்பர் 6 மற்றும் 10ஆம் திகதிகளில் மிகப் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி மற்றொரு ஆர்ப்பாட்டத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போதைய ஜனாதிபதியாக உள்ள மக்ரோன் பதவி விலக வேண்டும், அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், இராணுவ செலவினங்களை அதிகரிக்கும் உத்தேசத்தை அரசு கைவிட வேண்டும், சிக்கன நடவடிக்கைகள் என்ற போர்வையில் மக்களின் சமூக நலன் திட்டங்களில் கைவைப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும், ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நேட்டோ அமைப்பிலும், ஜரோப்பிய ஒன்றியத்திலும் இருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டும், காஸா போரை நிறுத்துவதில் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன. தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்களின் குரலாக இல்லை என்பதே அவர்களின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ளது.
தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தாலும், கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வித்தியாசமானவையாக இருந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு எந்தவொரு நிறுவனம்சார் அமைப்புகளும் அழைப்பு விடுக்கவில்லை. சமூக ஊடகங்கள் ஊடாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக விடுத்த அழைப்பை ஏற்றே மக்கள், பெரும்பாலும் இளையோர்கள், இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டிருந்தனர். சில இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறை நிறைந்ததாக மாறின. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. 550 இடங்களில் நடடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 175,000 பேர் வரை கலந்து கொண்டதாக காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் 211 பேர் உள்ளடங்கலாக 540 பேர் வரையானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாரிஸில் ஒரு உயர்தர பாடசாலையில் மாத்திரம் 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு 80,000 வரையான காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் 18ஆம் திகதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவை அதிக மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
மக்களின் கருத்தை அறிந்து, அதற்கேற்ப ஆட்சியை நடத்திச் செல்லும் பாங்கில் இருந்து உலகின் பல அரசாங்கங்களும் விலகிச் செல்வதை நீண்ட காலமாகவே பார்த்து வருகிறோம். 'ஜனநாயகத்தின் தொட்டில்' எனப் பெருமை பேசும் ஜரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதற்கு ஆகப் பிந்திய எடுத்துக் காட்டாக பிரான்ஸ் உள்ளது. தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டிய நிலையில் உள்ள மக்கள், வேறு வழியின்றி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வழிவகைகளைக் கையிலெடுக்க வேண்டிய நிலையே உள்ளது. அத்தகைய மக்களின் ஜனநாயகக் குரலை நசுக்கிவிட ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டே வருவதையும் பார்க்க முடிகின்றது.
மக்கள் எழுச்சி காரணமாக உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, தொடர்ச்சியாக நிகழ்ந்தும் வருகின்றன. மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கதிரையில் அமர்ந்துவிட்டு, தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் விருப்புக்கு மாறாக ஆட்சியாளர்கள் செயற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த உண்மையைத் தெரிந்திருந்தும், பெரும்பான்மை மக்களின் விருப்புக்கு மாறாகச் செயற்படும் அரசாங்கங்கள் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி காரணமாக வீழ்ச்சியைச் சந்தித்தே தீரும். உலக சரித்திரத்தில் மக்கள் ஜனநாயகம் தொடர்பில் பல முன்னுதாரணங்களைத் தந்த பிரான்ஸ் மக்கள் மீண்டுமொருமுறை தமது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார்கள். அதனை எதிர்கொள்ளும் நிலையில் தற்போதைய பிரான்ஸ் ஆட்சியாளர்கள் இல்லை என்பதே தற்போதைய கள யதார்த்தம்.
சுவிசிலிருந்து சண் தவராஜா


