அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் மட்டுமே எதிராகவும் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.
இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா, இந்த நியூயார்க் தீர்மானத்தில், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
பல தசாப்தங்களாக, இந்தியா இரு நாடுகள் தீர்வை ஆதரித்து பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க எப்போதும் முயற்சித்து வருகிறது.
ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வந்தது.
இந்நிலையில் தற்போது பாலஸ்தீன சுதந்திரத்திற்கு வாக்களித்து இஸ்ரேலை இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
நியூயார்க் பிரகடனம் சொல்வது என்ன?
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துதல் குறித்த நியூயார்க் பிரகடனம்' என்ற தலைப்பிலான இந்த முன்மொழிவு, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்டது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், இரு நாடுகள் பார்முலாவின் மூலம் மட்டுமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியமாகும் என்று நியூயார்க் பிரகடனம் கூறுகிறது.
அதேநேரம், இந்தப் பிரகடனம், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை கண்டிக்கிறது.
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரகடனம் கோருகிறது.
2023 முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 64,750 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பகுதியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளே என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் கடந்த மாதங்களில் நூற்றுக்காணோர் உயிரிழந்துள்ளனர்.


