TamilsGuide

அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன் -மஹிந்த ராஜபக்ச

நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலத்தில் அளவிற்கு அதிகமாக வரப்பிரசாதங்களை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறைத்து புதிய சட்டம் ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது.

இப் புதிய சட்டம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்த நிலையில் அரச இல்லங்களை இன்று வரை பயன்படுத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு, விஜேராம வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவியுடன் தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு சென்றார்

இதன்போது அவரது ஆதரவாளர்கள் மகிந்தவின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆரவாரம் செய்திருந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ”
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன். அரசியல் நடவடிக்கைகள் தொடரும்
நாட்டுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்மை உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறசொன்னார்கள்
அதனால் இங்கிருந்து செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் ”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதன்போது தெரிவித்திருந்தார்.

இது குறித்து  மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்துத் தெரிவிக்கையில்  ”பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாளாக இருந்திருக்கும்.

இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சட்டத்திற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24 மணிநேரத்திற்குள் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இந்த வீடு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்.

30வருடகால யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் கௌரவமளிக்கும் விதத்தினை நாட்டு மக்கள் இன்று கண்முன்பார்க்கக்கூடியதாக இருந்தது.

சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment