காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் 9 அன்று கூடியிருந்தனர்.
அப்போது, இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
இந்த தாக்குதல் கோழைத்தனமானது என கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முன்னதாக கண்டித்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது. இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


