TamilsGuide

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை சுத்தப்படுத்தும் பணி இன்றைய தினம் வியாழக்கிழமை (11) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இம்மாத இறுதி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை ஏற்படவுள்ள நிலையில் மன்னார் நகர் பகுதிக்குள் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும்     முகமாக நகரசபை ஊழியர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள்,நகரசபை சுகாதார உத்தியோகஸ்தரின் பங்குபற்றுதலுடன் குறித்த சுத்தப்படுத்தும் பணி இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக எமில் நகர் தொடக்கம் பனங்கட்டு கொட்டு பகுதியூடாக கழிவு நீர் வழிந்தோடி கடலுடன் கலக்கும் பிரதான கால்வாய் முதல் கட்டமாக   சுத்தப்படுத்தப்பட்டு கழிவுகள் அகற்ற பட்டதுடன் இதனை தொடர்ந்து இம்மாதம் முழுவதும் பிரதான வாய்கால்கள் அனைத்தும் நகரசபையால் சுத்தப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இம்முறை வடிகால் துப்பரவுக்காகவும் பராமரிப்புக்காவும் மன்னார் நகர சபையால் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment