முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை நீக்குதல் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும்.
நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும்.


