நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றம், அரசு கட்டிடங்களைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டல் முழுவதும் தீக்கிரையானது. தொடர்ந்து அப்பகுதியில் எரிக்கப்பட்ட கட்டிடத்தின் இருந்து புகை சூழ்ந்து காணப்படுகிறது.


