காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று கூடியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக கத்தார் திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் அதிபர் டொனால்டு டிரம்பின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் "துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலைத் தடுக்கத் தாமதமாகிவிட்டது," என்று தாக்குதல் குறித்து டிரம்ப் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
மேலும், "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு," என்று டிரம்ப் மழுப்பியுள்ளார்.
அதேவேளை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டில் தன்னிச்சையாக குண்டுவீசுவது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் நோக்கங்களை அடைய உதவாது" என்றும் டிரம்ப் கூறினார்.
கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், தாக்குதல் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமும் செயல்பட்டு வருகிறது.


