நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
இந்த சூழலில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.
அவர்களில் முதலாவது, காத்மாண்டு மேயர் மற்றும் பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
அடுத்தது சுமனா ஸ்ரேஸ்தா (40). அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) எம்பிஏ பட்டம் பெற்ற இவர், நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக முன்பு பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பற்றிப் பேசி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
மூன்றாவதாக முன்னாள் பத்திரிகையாளரும் இரண்டு முறை துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே (49) பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், கூட்டுறவு சேமிப்பு முறைகேடு வழக்கில் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.


