TamilsGuide

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உறுதி

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.

அந்த அறிக்கைக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் வழங்கினார்.

இதன்போது உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தொடர்ந்தும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே புதிய அரசாங்கத்தினால் தற்போது ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் உட்பட நிர்வாகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வௌிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
 

Leave a comment

Comment