TamilsGuide

எங்கள் நாட்டில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம் - இந்தியாவுக்கான சீனத் தூதர் அழைப்பு

பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின் போது பேசிய ஜி ஜின்பிங், "இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது மிக முக்கியம். சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான இரண்டு நாடுகள். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். நண்பர்களாகவும், நல்ல அண்டை வீட்டாராகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது மிக முக்கியம்" என்று பேசினார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றது.

இந்நிலையில், இந்தியா - சீனா உறவு குறித்து இந்தியாவுக்கான சீன தூதர் சு ஃபிஹோங் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "வரலாற்றை மாற்ற முடியாது, ஆனால் எதிர்காலத்தை நம்மால் வடிவமைக்க முடியும். சீனாவும் இந்தியாவும் சேர்ந்து தெற்குலகின் குரலை வலுப்படுத்த வேண்டும். சீனாவில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம். இருநாடுகளும் இணைந்து ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.
 

Leave a comment

Comment