TamilsGuide

இளையராஜாவின் பாடல்களை அஜித் படத்தில் பயன்படுத்த தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை

பயன்படுத்த பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில், தனது இசையில் ஏற்கனவே வேறு திரைப்படங்களில் வெளியான இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் வக்கீல் மூலமாக அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி குட் பேட் அக்லி படத்தில், இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

மனு குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
 

Leave a comment

Comment