TamilsGuide

தலையில் பெரிய தழும்புடன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

தலையில் தெரியும் பெரிய தழும்புடன் அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் 82, மீண்டும் பொதுவெளியில் தோன்றிய காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலானது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பைடன், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக முதலில் களம் இறங்கினார்; பின்னர் உடல் நிலையை காரணம் காட்டி, போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அது, உடல் உறுப்புகளுக்கும் பரவி இருந்தது. மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது சிகிச்சை பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. எனினும் அவர் வெளியிடங்களில் நடமாட்டம் குறைந்து விட்டது. இந்நிலையில், தலையில் பெரிய தழும்புடன் மீண்டும் பொதுவெளியில் பைடன் தோன்றினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

சமூகவலைதளங்களில் வெளியான காட்சிகளில், பைடன், தன் சொந்த ஊரான டெலாவேரில் தொழிலாளர் தின வார இறுதியில் நலம் விரும்பிகளை வாழ்த்திக்கொண்டிருந்தார். ரெஹோபோத் கடற்கரையில் உள்ள ஒரு தேவாலயத்தை விட்டு வெளியேறும் வீடியோவும் வெளியாகி இருந்தது.

பைடனின் உதவியாளர்கள், அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினர், இது தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையாகும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment