மலையகம் பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்தரிமே இருந்து வருகிறது.
கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம் கொட்டகலை அமையப்போவதாக தெரிவித்து வந்தனர் அதற்கான சகல ஏற்பாடுகளும் நடந்து முடிந்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் பல்கலைக்கழகம் இது வரை வரவில்லை.
இந்த அரசாங்கமாவுது மலையக மக்களின் மீது அக்கறை கொண்டு பல்கலைகழகம் அமைக்க முன்வருமானால் அதற்கு நிதியும் காணியும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக நேற்று (05) கொட்டகலை கொமர்சல் பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலைகத்திலிருந்து குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருடம் ஒன்றுக்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்றனர். ஆனால் இவர்கள் உயர்கல்வியினை தொடர தூர இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதனால் பெரும் தொகையான பணம் செலவாகின்றது. குறைந்தது ஒரு மாணவனுக்கு 25,000 தொடக்கம் 30,000 ரூபா மாதம் ஒன்றுக்கு செலவாகின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களை பொருத்த வரையில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த அளவு பணத்தினை செலவு செய்ய முடியாது, காரணம் அவர்கள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் குறைந்த சம்பளத்தில் அதனை செய்வது என்பது கேள்விக்குறியான விடயமே.
அதனால் இன்று அதிகமான மலையக மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியினை தொடர முடியாது இடை நடுவில் கைவிடுகின்றனர்.இன்னும் சிலர் பகுதி நேரங்களில் கூலி வேலை செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தான் நாங்கள் இன்று இலங்கையின் பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரணி அமரசூரியவுக்கு இந்த அரசாங்கத்திற்கு நேரடியாக ஆதரவு வழங்கிய கட்சி என்ற வகையில் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளோம்.
மலையக பல்கலைகழகம் அமையப்பெருமானால் அதனை நுவரெலியா கொட்டகலையில் அமைக்க வேண்டும் அதற்கான சகல வசதிகளும் உள்ளன, அத்தோடு அது அமையும் போது அரசாங்கத்திற்கு அதனை அமைப்பதற்கு நிதி நெருக்கடியோ காணி பிரச்சினையோ வருமானால் அதனை நாங்கள் செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
அவ்வாறு இல்லா விட்டால் கண்டி பேரதனை பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்றினையாவது ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் உட்பட் முக்கியஸத்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


