TamilsGuide

போலி வங்கி இணையத்தள மூலம் பணமோசடி

இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போலவே உருவாக்கப்பட்ட பல போலி இணையத்தளங்கள் மூலம், வாடிக்கையாளர்களிடம் இருந்து  600 மில்லியன் ரூபாவுக்கும்  அதிகமாக  பணம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதிபதி அசங்க போதரகம குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்ற பிற இணையத்தளங்களை அமைத்து தனிநபர்களை ஏமாற்றுவதன் மூலம் இந்த பெரிய அளவிலான பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றவாளிகள் குழு ஒன்று சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் இணையத்தளத்தைப் போன்ற இணையத்தளத்தை உருவாக்கி வங்கியின் வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பிக்கவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்யவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment