TamilsGuide

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்

இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம்.

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment