TamilsGuide

2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும்! – எதிர்க்கட்சி தலைவர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் எனவே பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும் என்பதுடன் இதனால் மக்களும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே இன, மத, சாதி, வர்க்கம் மற்றும் கட்சி பேதங்களை கடந்து சகல மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டில் தற்போது நமக்கு இன்னும் பல சவால்கள் காணப்படுகின்றன. இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நாடாக நாம் 2028 முதல், ஆண்டுதோறும் 5.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த வேண்டியுள்ளன. இவ்வாறு இந்த கடனை செலுத்துவதற்கு, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருடங்களிலும் குறைந்தபட்சம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும்.

உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கணித்துள்ளதன் பிரகாரம், இக்காலப் பிரிவுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்த மட்டத்திலயே அமையும் என வெளிக்கொணரப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் இன, மத, சாதி, வர்க்கம் மற்றும் கட்சி பேதங்களை கடந்து சகல மக்களும் இப் பயணத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இணைந்து கொள்ள வேண்டும்.

5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணிச் செல்ல முடியாதவிடத்து 2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் 2028 இல் ஏற்படும். இதனால் மக்களுக்கும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு நேர்ந்தால் மோசமான துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment