இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சீனா இன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. இந்த அணிவகுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தியான்மென் சதுக்கத்தில் நடந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தியான்மென் சதுக்கத்தில் நடந்து சென்று வீரர்களுடன் கைகுலுக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மியான்மர், ஈரான், மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், நேபாள பிரதமர், மாலத்தீவு அதிபர், மலேசியா, இந்தோனேசியா, ஜிம்பாப்வே, மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் உள்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டனர்.
சீனா முதல் முறையாக நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. போர் விமானங்கள், பிரமாண்டமான போர் டாங்கிகள், அதிவேக ஏவுகணைகள், ரோபோ டிரோன்கள் உள்ளிட்டவைகளின் அணிவகுப்பு நடந்தது. சீனா தனது ராணுவ ஆயுத பலத்தை உலகுக்கு காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியது.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.


