இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ரஷிய அதிபர் புதினும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு தனது பிரத்யேக குண்டு துளைக்காத ரெயிலில் வந்திருந்தார்.
பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து கிம் ஜாங் உன் உரையாடினார். இந்நிலையில் புதினுடனான உரையாடலுக்கு பின் அறையில் இருந்து கிம் ஜாங் உன் வெளியேறியதும் அவரது உதவியாளர்கள் அந்த அறையை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.
கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை, அதன் கைப்பிடி, அவர் தொட்ட இடங்கள், மேசை மற்றும் பொருட்களை அவசர அவசரமாக துடைத்தனர். அவர் குடித்து வைத்த கண்ணாடி கோப்பையை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர்கள் சில இரசாயனங்களை பயன்படுத்தி இதை செய்ததாக நம்பப்படுகிறது.
ரஷ்ய பத்திரிகையாளர் அலெக்சாண்டர் யுனாஷேவ் பேசுகையில் "பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஊழியர்கள் எல்லாவற்றையும் கவனமாக அழித்துவிட்டனர். கிம் அங்கு இருந்த்ததற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்கவில்லை" என்று கூறினார்.
எதிரி உளவாளிகள் கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ உள்ளிட்ட உயிரியல் தடயத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அவரது தலைமுடி, தோல் அல்லது உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ சேகரிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், அவரது உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதை தடுப்பதற்கும் இந்த முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கிம் மட்டும் இத்தகைய தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்லும்போது, அவரது மெய்க்காப்பாளர்கள் அவரது சிறுநீர் மற்றும் மல மாதிரிகளை சீல் வைக்கப்பட்ட சூட்கேஸ்களில் சேகரிப்பதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவை பாதுகாப்பாக மாஸ்கோவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. தனது உடல்நல ரகசியங்கள் வெளிப்படுவதைத் தடுக்க புதின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.


