வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
‘சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான பாவம் ஆக்ரோஷம்
அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி
மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.
பொதுவாக சினிமா ஷூட்டிங் ஆரம்பித்தார்கள் என்றால் முதல் நாள் படப்பிடிப்பில் மங்களகரமான காட்சிகளை தான் படம் பிடிப்பார்கள். இல்லை என்றால் ஒரு சாதாரண காட்சியை படமாக்குவார்கள்.
க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க முயற்சி எடுக்க மாட்டார்கள்.
படத்தின் மொத்தத்தையும் க்ளைமாக்ஸில் அழுந்த பதிக்க வேண்டும் என்பதால் அதற்கு தேவையான நேரமும் வேண்டும்.
கௌரவம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பே க்ளைமாக்ஸில் தான் தொடங்கப்பட்டது .படம் வேறு ஹெவி சப்ஜெக்ட்.
நடிகர்திலகமும் முதல் நாள்படப்பிடிப்புக்கு ஒப்பனையுடன் வருகிறார் படத்தின் டைரக்டர் வியட்நாம் வீடு சுந்தரம் க்ளைமேக்ஸ் காட்சி எடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். முதல் நாளே க்ளைமேக்ஸா என்று கேட்டார் நடிகர்திலகம்.படத்தில் அந்த காட்சியை பாருங்கள். நம்ப முடிகிறதா? நடிகர்திலகம் என்றதால் இது சாத்தியமானது.
பண்டரிபாயிடம் சிவாஜிஅவர்கள் கேஸ் கட்டுகளை எடுத்து காண்பித்து தான் ஜெயித்த வரலாறை சொல்வாரே ..அந்த காட்சிகளை தான் படம் முதல்நாள் படம் பிடித்தார்கள்.
சிவாஜி எந்த வித ஸ்டைலையும் காட்டி நடிக்காத கேரக்டர்களில் இந்த படத்தில் வரும் கண்ணன் கேரக்டரும் ஒன்று .பொதுவாக இளமையாக வரும் கேரக்டர்களில் தான் ஸ்டைல் காண்பித்து நடிப்பார்கள். அதையும் இதில் மாற்றி இருப்பார் சிவாஜி. பாரிஸ்டர் ரஜினிகாந்த் எது செய்தாலும் ஸ்டைலாக இருந்தது.அந்த கேரக்டரின் வடிவமைப்பு அப்படிப்பட்டது என்று சொல்ல முடியாது .அதை இப்படியும் செய்யலாம் என்று மாற்றிக் காட்டியவர் சிவாஜி.
உங்களின் இரு வேட தோற்றங்களில் நெடில் குறில் ஒல்லி குண்டு தெரிகிறதே .இது பெரிய ஆச்சர்யமாக தெரிகிறதே .கண்டிப்பாக ஒரே நேரத்தில் இந்த படத்தை செய்திருப்பீர்கள் .அதிசயமாக உள்ளதே என்று ஒரு ஹிந்தி நடிகர் கேட்டிருக்கிறார்.
பாரிஸ்டருக்கு நெஞ்சை நிமிர்த்தி வயிற்றை குறுக்கி நேர் செய்து விடுவேன். கண்ணனை சாதாரணமாக கொஞ்சம் குறுக்கி செய்து நடித்தேன் என்றார் நடிகர்களின் திலகம்.இது அந்த ஹிந்தி நடிகரின் சந்தேகம் மட்டுமல்ல , நிறைய பேரின் ஆச்சர்ய நெற்றி சுருக்கமும் கூட...
பாலூட்டி வளர்த்த கிளி பாடல் சிவாஜி நடித்து ஷுட்டிங் முடிந்துவிட்டது. சிவாஜி நடித்தது TMS குரலுக்கு அல்ல .. யார் பாடி சிவாஜி நடித்தார்.பின் எப்படி படத்தில் அப்படி தத்ரூபமாக இருந்தது? மறுபடியும் TMS பாடி ஷூட்டிங் செய்தார்களா? இந்த கேள்விக்கு பதில் என்னவென்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.முதலில் பாடியவர் மெல்லிசை மன்னர் MS.விஸ்வநாதன். விஸ்வநாதன் குரலுக்கு தான் சிவாஜி நடித்தார்.
TMS வெளிநாடு சென்று விட்டார்.கௌரவம் படம் முடித்தாக வேண்டும். விஸ்வநாதன் தன் குரலில் பாடி ஆடியோ டேப்பை கொடுத்தார். இப்போது படப்பிடிப்பு தடையில்லாமல் நடக்கட்டும்.TMS வந்ததும் மறுபடியும் ரெக்கார்டிங் செய்து பாடலை காட்சியில் இணைத்து விடலாம் என்று ஐடியா செய்திருந்தார்.TMS வந்ததும் ரெக்கார்டிங் செய்து பாடல் ஆடியோ இணைக்கப்பட்டது.இதில் இந்த ஆச்சர்யத்தை நினைத்து பாருங்கள்.TMS எப்படி பாடுவார் என்று நினைத்து சிவாஜி நடித்ததும் ,
சிவாஜியின் முக பாவனை அந்த உதட்டசைவுக்குக்கு ஏற்ற மாதிரி TMS எப்படி பாடி இருக்கிறார் என்பதையும் நினைத்தால் வியக்காமல் இருக்க முடியுமா?
சிவாஜியின் அன்னை இல்லத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும்.
அரேபிய பாலைவன நாடான குவைத்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் கௌரவம் ஆகும்.
வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கிய முதல் திரைப்படம் இது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்த உத்தமபுத்திரன் கௌரவம் ஆகிய இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமாவின் அதிசய நடிப்பு படங்களாகும்.
சட்டத்துறை படங்கள் என்றாலே அதில் வரும் வசனங்கள்தான் ரசிகர்களின் கவனிப்புக்கு ஆளாகும்.கௌரவம் படத்திலும் இப்படி இருந்தாலும் ஒரு காட்சி இதில் சேர்த்தி இல்லாமல் அதிக கவனம் பெற்றது. படத்தின் ஒரு காட்சியில் , சாட்சி விசாரணை நடைபெறும் போது, குற்றவாளியாக இருக்கும் மேஜர் சுந்தர்ராஜனிடம் பாரிஸ்டர் ரஜினிகாந்த் சில கேள்விகள் கேட்டுவிட்டு நீதிபதியை நோக்கி வருவார். பாரிஸ்டர் ரஜினிகாந்த் இப்போது கோர்ட்டில் ஏதோ ஒரு முக்கியமான விவாதம் செய்யப் போகிறார் ,என்று எல்லோரும் அவரையே பார்ப்பார்கள்.பார்க்கும் நாம் உள்பட.கோர்ட் அமைதியாக இருக்கும். ரஜினிகாந்த் நடந்து வருவார்.சில விநாடிகள் தொடரும். ஏதோ சொல்வார் என நினைத்தால் ,No questions என்று சொல்லி இருக்கையில் அமர்ந்து விடுவார்.இந்த காட்சி கூட அதிகளவு ரசிக்கப்பட்டது.
இந்த படத்தின் ரசிப்புக்கு ஆளான ஒரு ரசிகன் ,வேறு எந்த வக்கீல் வேடத்தையும் முன்னிறுத்த மாட்டான் ...
செந்தில்வேல் சிவராஜ்


