TamilsGuide

வலுவான கூட்டாளிகளான இந்தியா, ரஷியா, சீனா- டிரம்பை சாடிய முன்னாள் அதிகாரி

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்தார்.

ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மூன்று தலைவர்களும் சந்தித்துப் பேசியதை உலகின் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஜான் பால்டன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவையும், ரஷியாவையும் மீண்டும் ஒன்றிணைத்து விட்டது. இந்தியா-ரஷியாவை பிரிக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா செய்த முயற்சிகளை டிரம்ப் சீரழித்து விட்டார். டிரம்ப்பின் தவறான கொள்கையால் இந்தியா, சீனா, ரஷியா நாடுகள் வலுவான கூட்டாளியாகி விட்டன. அவரது தவறான பேரழிவு வரி கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அவரது இந்த முடிவால் கிழக்கு ஆசியாவில் சீனா நிலைமையை மறு வடிவமைக்க அனுமதித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment