லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒரு விருதை வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
“வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில், அவர் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 61 ஆண்டுகால WPY வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
1965 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு, இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 60,636 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 100 புகைப்படங்கள் மட்டுமே விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளன.
லக்ஷிதவின் விருது பெற்ற ‘Toxic Tip’ எனும் தலைப்பிலான புகைப்படம், அம்பாறை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மனித-யானை மோதல்கள் மற்றும் தவறான கழிவு மேலாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்து வந்த அவர், உணவுக்காக ஒரு பெரிய குப்பைக் கிடங்கில் தேடும் தனி யானையின் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த படம், இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன், மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கழிவுகளை உட்கொள்வதால் யானைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கழிவுகள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, யானைகளின் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை, ஆசியாவில் மனித-யானை மோதல்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 400 யானைகளும், 100க்கும் மேற்பட்ட மனிதர்களும் இந்த மோதல்களில் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக லக்ஷித கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்”
“இந்த விருது எனக்கானதல்ல; நமது வாழ்க்கை முறை மற்றும் கழிவு மேலாண்மை வனவிலங்குகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கை. யானைகள் நமது கலாசார அடையாளத்தின் பகுதியாக உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பது நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சமம்,” எனக் கூறினார்.
இந்த வெற்றி, இலங்கையை உலக வனவிலங்கு புகைப்படத் துறையில் மீண்டும் உயர்த்தி நிறுத்திய பெருமையான தருணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


