பசி, பட்டினி, பஞ்சம் என்றதும் நம் அனைவரின் மனிதிலும் ஞாபகத்துக்கு வரும் ஒரு நாடு சோமாலியா. பட்டினியால் உடல் மெலிந்து, வாடி இருப்போரை சோமாலியாக்காரன் என விளிக்கும் அளவிற்கு சோமலியப் பஞ்சம் பிரபலமானது. சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட, 'பட்டினியால் மெலிந்த ஒரு குழந்தையை உண்ணக் காத்திருக்கும் ஒரு பருந்தின் நிழற்படம்' உலகப் பிரசித்தமானது. அமெரிக்க நிழற்படக் கலைஞரான கெவின் காட்டர் என்பவரால் எடுக்கப்பட்ட அந்த நிழற்படம் உலகின் ஆகச் சிறந்த விருதான புளிற்சர் விருதைப் பெற்றிருந்தது. 1993 மார்ச் 26இல் இந்தப் படம் நியூ யோர்க் ரைம்ஸில் வெளியாகி உலகின் மனசாட்சியை உலுக்கியது. சம்பந்தப்பட்ட குழந்தையைக் காப்பாற்ற காட்டர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுப்பிய அதிர்வினை, காட்டர் தற்கொலை செய்யும் அளவிற்கு அவரை இட்டுச் சென்றது என்பது தனிக்கதை.
உலக வரலாறு நெடுகிலும் பட்டினிச் சாவுகள் காலத்துக்குக் காலம் பதிவாகி உள்ளன. மனித குலம் நாகரிகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமை பேசப்படும் இன்றைய காலகட்டத்திலும் கூட இந்த அவலம் தொடர்வது மனித குலத்திற்கே அவமானமானது. உலக நாடுகளாலும், ஐ.நா. சபை உள்ளிட்ட நிறுவனங்களாலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களாலும் பட்டினி ஒழிப்புத் திட்டங்கள் பன்னெடுங் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பட்டினி நிலைமை தொடரவே செய்கிறது.
உலகளாவிய அடிப்படையில் 638 முதல் 720 மில்லியன் வரையான மக்கள் கடந்த வருடத்தில் பட்டினி நிலைமையை எதிர்கொண்டு இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் மொத்த சனத்தொகையில் 7.8 முதல் 8.8 விழுக்காடு மக்கள் இவ்வாறான நிலையில் இருந்ததாக ஐ.நா. சபையின் தொண்டு நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. 'உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பிலான நிலவரம்' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியானது. ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம், விவசாய அபிவிருத்திக்கான பன்னாட்டு நிதியம், ஐ.நா. சிறுவர் நிதியம், உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தன.
பொதுவில் உலக மாந்தரிடையேயான பட்டினி நிலைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. 2002ஆம் ஆண்டில் 8.7 விழுக்காடு வீழ்ச்சியும் 2023ஆம் ஆண்டில் 8.5 விழுக்காடு வீழ்ச்சியும் அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் தென்னமெரிக்கப் பிராந்தியங்களில் இந்த முன்னேற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆபிரிக்க மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் பட்டினி நிலைமை அதிகரித்துச் செல்வதையும் பார்க்க முடிகின்றது.
2022ஆம் ஆண்டில் 673 மில்லியன் மக்கள் பட்டினி நிலவரத்தை எதிர்கொண்டு இருந்தனர். ஆனால், தற்போது அது 22 மில்லியனால் குறைந்துள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடையலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 512 மில்லியனாக வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மக்கள் தொகையில் 60 வீதமானோர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில், ஆபிரிக்காவில் வசிக்கும் 307 மில்லியன் மக்களும், ஆசியாவில் வசிக்கும் 323 மில்லியன் மக்களும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பிராந்தியங்களில் வசிக்கும் 34 மில்லியன் மக்களும் பட்டினி நிலையை எதிர்கொண்டு இருந்தனர். உணவுப் பாதுகாப்பு நிலைமை ஆபிரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக வீழ்ச்சியை நோக்கிச் செல்வது தொடர்ந்து அவதானிக்கப்படுகின்றது. அதேவேளை, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பிராந்தியங்களில் பட்டினி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதையும் பார்க்க முடிகின்றது.
ஆபிரிக்க நாடுகளுள் சில மோசமான பட்டினி நிலைமையை எதிர்கொண்டு உள்ளன. பல பத்தாண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்துவரும் சூடானில் 24.6 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு உள்ளனர். இது ஒட்டுமொத்த குடித்தொகையில் அரைவாசிக்கும் அதிகமாகும். அதேபோன்று சூடானில் இருந்து புதிய நாடாக உருவான தென் சூடானிலும் 60 விழுக்காடு வரையான மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு உள்ளனர். இந்த நாட்டிலும் தொடர்ச்சியாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர, சோமாலியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகளில் சற்றொப்ப 50 விழுக்காடு மக்களும், சியரா லியோனில் 40 விழுக்காடு மக்களும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு உள்ளனர். நைஜீரியா மற்றும் எதியோப்பியா ஆகிய நாடுகளில் பட்டினியை எதிர்கொண்டுள்ள மக்களின் வீதம் 25 ஆக உள்ளது.
மத்திய ஆசியப் பிராந்திய நாடான யேமனில் 80 விழுக்காடு மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு உள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த நாட்டிலும் பல பத்தாண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றமை தெரிந்ததே. இந்தப் பிராந்தியத்தில் உள்ள சிரியாவில் 60 விழுக்காடு மக்களும், லெபனானில் 50 விழுக்காடு மக்களும், ஈராக்கில் 25 விழுக்காடு மக்களும், யோர்தானில் 14 விழுக்காடு மக்களும் பட்டினி அவலத்தை எதிர்கொண்டு உள்ளனர். சற்றொப்ப இரண்டு வருடங்களாக கொடிய போரை அனுபவித்துவரும் பலஸ்தீன காஸாப் பிராந்தியத்தில் தினசரி பட்டினிச் சாவுகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பிலான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் அரசாங்கம் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்கள் உலகின் கண்களுக்கு முன்னாலேயே செத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
பட்டினி நிலைமை தவிர போதிய உணவு கிட்டாத நிலைமையில் உலகம் முழுவதிலும் 2.3 பில்லியன் மக்கள் வாழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதிலும் ஆண்களை விடவும் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வந்த நாடுகளில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்பட்டுவரும் சூழலில், அவற்றை வறிய நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க பொருண்மிய வல்லமைமிக்க நாடுகள் முன்வராமையைப் பார்க்க முடிகின்றது. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தொடர்பில் உலகளாவிய மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் நடைமுறையில் அவை பெரிதும் பயனற்றவையாகவே உள்ளதே கசப்பான யதார்த்தம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைகளில் உலகளாவிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2022இல் 4.01 டொலராக விளங்கிய கொள்வனவு சமநிலை 2024இல் 4.46ஆக உயர்ந்துள்ளது. என்றாலும் பொதுவில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. 2019இல் 2.76 பில்லியனாக இருந்த இந்த மக்கட்தொகை 2024இல் 2.60 பில்லியனாக வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் கொள்வனவுச் சமநிலையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் கண்டத்தில் 864 மில்லியனாக இருந்த மக்கட்தொகை 2024இல் ஒரு பில்லியனாக உயர்ந்திருக்கிறது. இதனால் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
குழந்தைகள் மத்தியிலான போசாக்கின்மை முன்னரை விடவும் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. 2012இல் 26.4 விழுக்காடாக இருந்த குழந்தைகள் மத்தியிலான போசாக்கின்மை 2024இல் 23.2 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது.
மறுபுறம், பெரியவர்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரிப்பில் உயர்வு ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. 2012இல் 12.1ஆக இருந்த உடல் பருமன் அதிகரிப்பு 2022இல் 15.8 ஆக உயர்ந்திருக்கிறது.
பட்டினி நிலைமை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு இருக்கிறது. இதற்கு அடிப்படையாக போர்கள், உள்நாட்டு யுத்தம் என்பவை உள்ளன. குறிப்பாக உக்ரைன் போர் காரணமாக உணவுப் பொருட்களின் ஏற்றுமதி பாதிப்பு, விவசாயத்துக்குத் தேவையான உரப் பொருட்களின் விநியோகம் தடைப்பட்டமை ஆகியவை உள்ளன.
மனிதர்கள் மனது வைத்தால் போர்களைத் தடுக்கலாம். அதன் விளைவாக உருவாகும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தடுக்கலாம். அழிவுக்காகப் பயன்படுத்தும் நிதியை வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்களுக்காகச் செலவிடலாம். ஆனால், போர்வெறி கொண்ட ஆட்சியாளர்களும், போர்களால் இலாபம் ஈட்டும் பன்னாட்டு வணிக நிறுவனங்களும் அதற்கு முன்வர மாட்டா என்பது தெரிந்த விடயமே. இந்நிலையில் உலகில் பட்டினி ஒழிப்பு என்பது எட்டாக்கனியே.
சுவிசிலிருந்து சண் தவராஜா


