கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் திருமண வைபோகம் காணவேண்டிய அந்த மண்டபத்தில் வரவேற்பு விழாவில் இருவீட்டாரும் மும்முரமாக இருந்தனர்.
மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் டிப்ளமோ படித்த வாலிபருக்கும் தான் இந்த திருமண வரவேற்பு மாலை 6 மணிக்கு தொடங்கியது. இரவு 9.30 மணி வரை எந்தவித பிரச்சனையும் இன்றி வரவேற்பு விழா நடந்தது. அதன்பிறகு தான் டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.
அப்போது அங்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையையும் அவர்கள் மேடைக்கு ஏற்றி ஆட வைத்தனர். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளையும் மேடைக்கு வருமாறு வற்புறுத்தி குரல் எழுப்பினர்.
ஆனால் தனக்கு இதுபோன்று நடனம் ஆடி பழக்கம் இல்லை என்றும், பொது இடங்களில் நான் இதுபோன்று நடனம் ஆட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் கூறுவதை காது கொடுத்து கேட்காத அந்த வாலிபர்கள் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், மணமகளின் உறவினர்கள் சிலர், அப்படி எல்லாம் எங்கள் வீட்டு பெண் ஆட வரமாட்டாள் என்று வாலிபர்களை கண்டித்தனர்.
அதை சொல்ல நீங்கள் யார் என்று மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளின் உறவினர்களுடன் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர். என்ன நடக்கிறது என்று இரு வீட்டாரும் யோசித்து பார்க்கும் முன்பு இந்த கைகலப்பு தகராறாக முற்றியது.
இதை பார்த்த மணமகள், மாப்பிள்ளையின் குடிகார நண்பர்களின் அற்ப வேண்டுகோளையும், அதற்காக அவர்கள் தனது உறவினர்களை தாக்கியதையும் நினைத்து இனி இந்த மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன். திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என்று அதிரடியாக கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசினார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது.
உடனே மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.


