யாழ்ப்பாணம்,வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயிலைச் சூழவுள்ள வயல் காணிகளில் காணப்படும் புதர்களுக்கு விஷமிகள் தீ வைத்து வருவதால் அப்பகுதி ஊடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்திய பின்னர், யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வீசும் கடும்காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதிக்குத் தொடங்கும் வயல் வெளிகளில் கடந்த சில வருடங்களாக விசமிகள் தீ மூட்டி வருகின்றனர். குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமல், பிரதேச சபையின், அதிகாரிகள் திணறிவருகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு பருவகாலங்களில் வெளி நாடுப் பறவைகள் அதிகம் வருகை தருவதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விசமிகள் தீ வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக பறவைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் உணவின்றி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


