TamilsGuide

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இம்மாநாட்டில் உலகெங்குமுள்ள அரசியல், தொழில், ஆய்வு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த தமிழ் வல்லுனர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு வழங்குபவர்கள் பங்குபற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில்,

தமிழர்கள் தமிழ்நாட்டில் மாத்திரமின்றி உலகெங்கும் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளனர். மன்னர் இராஜராஜ சோழன் காலம் தொடக்கம் தற்போது வரை வணிக ரீதியாக தங்களது வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தனர்.

தமிழர்கள் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி உலகம் முழுவது வியாபித்துள்ளனர். மேலும் தொழில் வல்லுனர்கள் காலத்திற்கு ஏற்ப தொழிலை மேம்படுத்த வேண்டும்.

அதற்கு ஒரு நல்ல உதாரணமாக Nokia கையடக்க தொலைபேசியை குறிப்பிடலாம். 15 வருடங்களுக்கு முன்பு Nokia கையடக்க தொலைபேசி மாத்திரமே சந்தையில் முன்னிலையில் இருந்தது.

அவர்கள் அவர்களுடைய தரத்தையும், உற்பத்தியையும் இன்றுவரை குறைக்கவில்லை, ஆனால் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டுவராததால் இன்று சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Apple, Samsung போன்ற நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் தங்களது உற்பத்தியை மேம்படுத்தியதால் இன்று சந்தையில் அவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். எமது உற்பத்திகள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெறவில்லை என்றால் வணிக ரீதியாக நாம் பின்தள்ளப்படுவோம் எனவும், அதற்கு Nokia ஒரு சிறந்த உதாரணம் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

எதிர்காலப் பொருளாதார சிந்தனைகள் கொண்ட சர்வதேச அரசியல் தமிழ் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக செந்தில் தொண்டமான் அடையாளம் காணப்பட்டு, இம்மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொவிட் தொற்று ஏற்பட்டு, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இலங்கைக்கு பல்வேறு சமூக, பொருளாதார உடனடி உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment