TamilsGuide

இந்தியாவுக்கு ரஷியா கொடுத்த ஆஃபர்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இந்த வரி வரும் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.

இந்த வரிகள் ஜவுளி, கடல் பொருட்கள் மற்றும் தோல் போன்ற முக்கிய துறைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும் எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ரஷிய தூதரக அதிகாரி ரோமன் பாபுஷ்கின் பேசுகையில், "ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும்போது இந்தியா எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியா-ரஷியா இடையிலான வர்த்தகம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இது ஆண்டுதோறும் 10 சதவீதம் வளரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.

மேலும், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்கள் விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டால், ரஷிய சந்தை இந்தியாவிற்கு எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான எண்ணெய் வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போருக்கு முன்பு வெறும் 0.2 சதவீதமாக இருந்த ரஷிய எண்ணெய் இறக்குமதி 2023 ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதத்தை எட்டியுள்ளது.

தற்போது, இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் சுமார் 35 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் இந்தியா சுமார் 13 பில்லியன் டாலர்களை சேமிக்க முடிந்தது. 
 

Leave a comment

Comment