" ஏவி.எம். நிறுவனத்துக்காக "அன்பே வா' படத்தை இயக்கியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கென்று ஒரு பார்முலா உண்டு. அவர் ஏழையாக இருப்பார். ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வார். நிறைய சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பார்முலாவுக்குள் அடங்காத படம் "அன்பே வா'. அப்படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் கூறிய போது, இந்தப் படத்தில் நடிக்கும் எல்லோருமே பொம்மைகள், நீங்கள்தான் அவர்களை ஆட்டுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். "அன்பே வா' வெற்றிவிழாவின் போது ரசிகர்களின் முன்னிலையிலேயே இந்த விஷயத்தைச் சொன்னார்.
"அன்பே வா' படப்பிடிப்பு நடக்கும் போது சென்னையில் கிங்காங், தாராசிங் போன்ற புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகள் நடந்து வந்தன. அதில் பங்கு பெற வந்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவரை எம்.ஜி.ஆருடன் மோத வைத்து படமாக்கிய சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை விட முக்கியமான விஷயம் "அன்பே வா' படம் முடிந்த பிறகு ஒரு முழுப் பாடலும் நடனக் காட்சியும் வரும். அதையும் முழுமையாக பார்த்து ரசித்தார்கள். "அன்பே வா' படத்துக்கு முன்பும், பின்பும் இப்படி படம் முடிவடைந்து ஒரு பாடல் மற்றும் நடன காட்சி எந்த படத்திலும் இடம் பெற்றதேயில்லை !
இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்


