முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்ப கட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
அரசாங்கத்திற்கு 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அப்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், குற்றப்பத்திரிகையில் பல திருத்தங்களைச் சேர்க்கவும் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன் முதற்கட்ட விசாரணை ஆரம்பத்தின் போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.


