TamilsGuide

இளைஞர் யுவதிகளுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்

சிறுவர் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் திருமண வயதை எட்டும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை வழங்கும் வகையில்  புதிய வீட்டு வசதித்  திட்டமொன்று  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம், அபிவிருத்தி நிதித் திணைக்களம், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை ஒருங்கிணைத்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் திருமண எதிர்பார்ப்புடன் இருக்கும் இளைஞர் யுவதிகள் மற்றும் பாதுகாப்பான வீடு இல்லாதவர்களின் நலன் கருதி இப் புதிய வீட்டு வசதித்  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாதுகாப்பில் இருந்து சமூகத்திற்கு மீளும், திருமண எதிர்பார்ப்புடன் உள்ள அல்லது கடந்த 10 வருடத்தில் திருமணமான பாதுகாப்பான வீடு இல்லாதவர்கள் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர் யுவதிகளுக்கு வீட்டு வசதியை வழங்குவதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத் திட்டத்தின் கீழ், ஒரு வீடு அமைப்பதற்காக 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  2025 வரவு–செலவு திட்டத்தில் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், பாதுகாப்பான சூழலில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகமயப்படுத்தலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment