கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நேற்று மன்றில் தெரிவித்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


