ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
இந்நிலையில் இந்த கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, இந்தியாவை போல சீனா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என்று அவர் கூறினார்.
அவர் கூறியதாவது, "ரஷியாவிலிருந்து சீனா வாங்கி விற்கும் எண்ணெயில் பெரும் சதவீதத்தை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. இது தவிர, இயற்கை எரிவாயுவையும் வாங்குகின்றன. இந்த சூழலில், தடைகள் விதிக்கப்பட்டால், வாங்குபவர்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டியிருக்கும். இது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிக்கும்" என்று கூறினார்.
சீனா மற்றும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அமெரிக்க செனட் மசோதாவை உருவாக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
ரஷியா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
தற்போது இது குறித்து தனக்கு தகவல் இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


