உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் போர் முடிவடையும். புதின் அதை முடிக்க விரும்புகிறார். முழு உலகமும் இதனால் சோர்வடைந்துவிட்டது.
நான் 6 போர்களை நிறுத்தியுள்ளேன். ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது எளிதான ஒன்றல்ல. இது இருப்பதிலேயே கடினமானது. இந்தியா-பாகிஸ்தான்-ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெரிய இடங்களைப் பற்றிப் பேசுகிறோம்.
இந்தப் போர்களில் சிலவற்றைப் பாருங்கள். நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அதைப் பாருங்கள். ரூவாண்டா மற்றும் காங்கோ இடையே இந்த மோதல் 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் 6 போர்களைச் முடித்துள்ளோம்.
இந்த (ரஷியா - உக்ரைன்) போரையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்" என்று கூறினார். அப்போது அவர் அருகில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 9 அன்று போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த போர் நிறுத்தத்தை வர்த்தக தடைகளை வைத்து மிரட்டி இரு நாட்டு தலைவர்களையும் சம்மதிக்க வைத்து தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 25 முறைக்கும் மேலாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


