நாட்டில் கடந்த காலங்களில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்று இலங்கையின் கனியவளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளதாவது “ நாட்டில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்று இந்தியாவுக்கு சென்று இலங்கையின் கனியவளங்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுனில் ஹந்துனெத்தி இந்தியாவுக்கு சென்று அங்கு இந்திய அதிகாரிகளுடன் நாட்டின் கனியவளங்களைவிற்பனை செய்வது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
ஒரு புறம் மின்சக்தி அமைச்சு மறுசீரமைப்பு என்ற பெயரில் பகுதி பகுதியாக பிரித்து 6 நிறுவனங்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டில் எதிர்காலத்தில் மின்சக்தி துறை மற்றும் வலுசக்தி துறை ஆகியன கேள்விக்குறியாகும்.
இலங்கையின் கனிம வளங்களை மொத்தமாக தம்வசப்படுத்திக்கொள்வதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. எதிர்காலத்தில் நீர்மின்சாரம் மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்தியா இந்த திட்டத்துடன் செயற்படுகிறது.இந்த பின்னணியில் தற்போது அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இந்தியாவுக்கு சென்று அங்கு பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளார்.இந்திய ஊடகங்களில் அது தொடர்பான புகைப்படமொன்று வெளியாகியிருந்தது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


