அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோர் நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் (இந்தக் கட்டுரை எழுதப்படும்போது சந்திப்பு நடைபெற்றிருக்கவில்லை) உக்ரைன் மோதலுக்கு தீர்வு ஒன்று விரைவில் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது. தீர்வு எட்டப்பட்டே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ட்ரம்ப் விடாப்பிடியாக உள்ள நிலையிலும், அமைதி வழி மூலம் தீர்வுக்குத் தயார் என ரஸ்யா தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் நிலையிலும், போரைத் தொடர்வதற்கான ஆதரவை உக்ரைன் தொடர்ச்சியாக இழந்துவரும் நிலையிலும் அடுத்துவரும் நாட்களில் உக்ரைன் போர் தொடர்பிலான தீர்க்கமான முடிவுகள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.
போர் ஒன்று முடிவுக்கு வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 'யார் குற்றினாலும் அரிசியானால் சரி' என்ற சொலவடைக்கு ஒப்ப, ட்ரம்பின் தலையீடு என்றில்லாமல், யார் தலையிட்டாவது உக்ரைன் போருக்கு நீடித்த தீர்வு எட்டப்படுவது சிறப்பு. இதன் மூலம் பெறுமதியான மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதுடன், மூன்றாம் உலகப் போருக்கான அபாயமும் நீங்க வாய்ப்புள்ளது. போரில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளும் தங்கள் வளங்களை நாட்டின் அபிவிருத்திக்காகச் செலவிடக் கூடிய வாய்ப்பும் உருவாகும்.
உக்ரைன் போருக்கு அமைதித் தீர்வு எட்டப்பட்டு விட்டால் ஐரோப்பாவில் சூழ்ந்துள்ள போர் மேகங்கள் முழுவதுமாகக் காணாமல் போய்விடுமா? இந்தக் கண்டத்தில் வாழும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடுமா? என்பன போன்ற கேள்விகளை இந்த நேரத்தில் எழுப்புவது காலத் தேவையானது.
உக்ரைன் விவகாரத்தில் நேட்டோவின் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை ரஸ்யா தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றது. மிகச் சரியாகச் சொல்வதானால் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, யேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வல்லரசுகள் ரஸ்யாவை ஒரு பகை நாடாகவே கருதிச் செயற்பட்டு வருகின்றன. ஐரோப்பிய விழுமியங்களுக்கு அச்சுறுத்தலான ஒரு நாடாக ரஸ்யாவைக் கருதும் இத்தகைய நாடுகள், ரஸ்யாவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்து வருவதுடன், தமது கருத்துக்கு ஆதரவாக ஏனைய நாடுகளையும் அணிதிரட்டி வருகின்றன. அது மாத்திரமன்றி, ரஸ்யாவை எதிர்கொள்ளும் நோக்குடன் தமது படைக் கட்டுமானங்களையும் வலுப்படுத்தி வருகின்றன. அடுத்த ஐந்து வருடங்களில் ரஸ்யா தமது நாடுகளைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டு வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் இத்தகைய கருத்துக்களை ரஸ்யா தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற போதிலும் அவை பெரிதும் கண்டு கொள்ளப்படாத சூழலே உள்ளது.
ரஸ்யாவுக்கு எதிரான ஒரு போர்ச் சன்னத முகாமைக் கட்டமைத்துவரும் ஐரோப்பிய நாடுகளின் நீண்டகால முயற்சியில் உக்ரைன் போருக்கான தீர்வானது ஒரு பின்னடைவாக அமைய உள்ள போதிலும், அத்தகைய நாடுகள் ரஸ்யாவைப் பலவீனப்படுத்தும் தமது முயற்சிகளை முழுமையாகக் கைவிட்டு விட முன்வரும் என நினைப்பது அறிவிழிவு. ரஸ்யாவைச் சூழவுள்ள ஏனைய சில நாடுகளைக் கொம்பு சீவிவிடும் முயற்சியில் அத்தகைய நாடுகள் பல வருடங்களாக ஈடுபட்டே வருகின்றன. அண்மைக் காலமாக மேனாள் சோவியத் ஒன்றிய நாடான மோல்டோவாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள், ரஸ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் அடுத்த போர் அங்கிருந்துதான் ஆரம்பமாக உள்ளதோ என்ற ஐயத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட நாடான மோல்டோவா, மேற்கே ருமேனியாவையும் ஏனைய மூன்று திசைகளிலும் உக்ரைனையும் எல்லையாகக் கொண்டுள்ளது. உக்ரைனைத் தொடர்ந்து ஐரோப்பாவின் வறுமையான நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மோல்டோவாவின் சனத்தொகை வெறும் 23.8 இலட்சமே. 1991ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்று குடியரசாகிய இந்த நாடு தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. தற்போதைய ஆட்சியாளரான மய்யா சன்டு மேற்குலக விழுமியங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளதுடன், நேட்டோ அமைப்பின் செயற்பாடுகளுக்கும் ஆதரவு கொண்டவராகவும் விளங்கி வருகின்றார். ரஸ்யாவின் மீது வெறுப்புக் கொண்ட ஒருவராகத் தன்னைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் இவர் உக்ரைன் போரில் உக்ரைனின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளார்.
ஐரோப்பாவின் கிழக்கு முனை என வர்ணிக்கப்படும் இந்தப் பிராந்தியத்தில் தமது பலத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்துவரும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ சார்பு நாடுகள் மோல்டோவாவின் படைக் கட்டுமானத்தை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதைக் காண முடிகின்றது. ரஸ்ய மொழி பேசுபவர்களும், ரஸ்யக் குடியுரிமை கொண்டவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இந்த நாட்டில் வசித்துவரும் நிலையில் ரஸ்ய மொழி பேசுபவர்களின் நலன்களுக்காக ரஸ்யா தொடர்ந்து குரல்தந்து வருவதையும் பார்க்க முடிகின்றது. அடிப்படையில் ரஸ்ய வெறுப்பைக் கொண்டவரான சன்டு அம்மையார், ரஸ்யாவின் இத்தகைய நடவடிக்கைகளை ஒரு தேவையற்ற தலையீடாகக் கருதிச் செயற்பட்டு வருகிறார்.
அடுத்த மாதத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தனது அரசியல் எதிரிகளை மாத்திரமன்றி, ரஸ்யாவுக்கு ஆதரவான மனநிலை கொண்ட அரசியல்வாதிகளையும் களத்தில் இருந்து அகற்றும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. அதன் ஒரு அங்கமாக, சுயாட்சிப் பிரதேசமான ககுசாவின் ஆளுநரான எவெனியா குட்சுல் மீது 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இவரது ரஸ்ய ஆதரவு நிலைப்பாடு காரணமாக இவர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமன்றி அவரது விடுதலையைக் கோரி ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். மோல்டேவாவின் பல்லினத்துவ மரபின் அடையாளமாகத் திகழும் குட்சுல், உக்ரைன் போரில் ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக உள்ளார். அத்துடன், 2024 மார்ச்சில் மேற்கொண்டிருந்த ரஸ்ய விஜயத்தின்போது ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும் சந்தித்து உரையாடியிருந்தார். இத்தகைய பின்னணியிலேயே அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் சன்டு தலைமையிலான அணி வெற்றிபெறுமானால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது உறவை சன்டு மேலும் வலுப்படுத்துவதுடன், நேட்டோவுடனான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பார் எனவும் எதிர்பார்க்கலாம். அவரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ரஸ்ய மொழி பேசுபவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டு வருகின்றது. சன்டுவின் செயற்பாடுகள் ககுசாப் பிராந்தியத்துடன் முடிவுற்றுவிடப் போவதில்லை என நம்பப்படுகின்றது. தனது ஐரோப்பிய ஒன்றிய எஜமானர்களைத் திருப்திப்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளை தொடர்ந்துவரும் அவர், ரஸ்யாவுக்கு எதிரான செயற்பாடுகளை நாடெங்கிலும் முடுக்கிவிடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது நடவடிக்கையின் ஒரு அங்கமாக, மற்றொரு சுயாட்சிப் பிரதேசமான திரான்சுனிஸ்திரியாவில் தற்போது நிலவிவரும் தற்காலிக அமைதியைச் சீர்குலைக்கவும், 1992ஆம் ஆண்டுமுதல் அந்தப் பிரதேசத்தில் சமாதானப் படைகளாகச் செயற்பட்டுவரும் 10,000 வரையான ரஸ்யப் படையினரை வெளியேற்றவும் சன்டு முனையலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட இந்தப் பிராந்தியத்தின் தற்போதைய நிலையை மாற்றியமைக்க மோல்டோவா அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் ரஸ்யாவின் பலத்த எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என்பது சொல்லாமலே புரியும்.
ரஸ்ய எதிர்ப்பு மனநிலையுடன் சன்டு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் யேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிட்டும் என்பது வெள்ளிடைமலை. தனது எல்லையோரமாக உள்ள நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நேட்டோ விஸ்தரிப்பு நடவடிக்கைகளை எப்பாடு பட்டேனும் தடுத்துவிட ரஸ்யா கங்கணம் கட்டிச் செயற்பட்டுவரும் நிலையில் மோல்டோவா அரசின் எதிர்கால நடவடிக்கைகள் உக்ரைன் மீதான படையெடுப்பைப் போன்ற ஒன்றுக்கு ரஸ்யாவை நிர்ப்பந்திக்கும் என நிச்சயம் நம்பலாம்.
ரஸ்யாவைப் பலவீனப்படுத்தத் துடிக்கும் ஐரோப்பிய நாடுகளின் கனவை நிறைவேற்ற இதுவொரு வாய்ப்பாக அமையக்கூடும். நேட்டோவின் ஆசைக்கு எவ்வாறு உக்ரைன் பலிக்கடா ஆகியதோ, அதேபோன்ற ஒரு அபாயக் கட்டத்திலேயே மோல்டோவா தற்போது இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அத்தகைய ஒரு நிலை உருவாவதும், அதனைத் தடுப்பதும் மோல்டோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெறப் போகும் ஆட்சியாளரின் கைகளிலேயே முழுவதும் தங்கியுள்ளது.
சுவிசிலிருந்து சண் தவராஜா


