TamilsGuide

சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமைச்சர் வசந்த சமரசிங்க

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ”போதுமான அளவு  கீரி சம்பா அரிசி கிடைக்காவிட்டால்  மாற்று அரிசியை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ” சந்தையில் கீரி சம்பாவுக்கு மாத்திரமே பற்றாக்குறை நிலவுகின்றது.  எனவே கீரி சம்பாவுக்கான மாற்று அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.  ஆனால் இதற்கான இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது சிறுபோக அறுவடை இடம்பெறுகின்றமையும் இதற்கான பிரதான காரணமாகும்.

இருப்பினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கீரி சம்பா பற்றாக்குறை மேலும் மோசமடையுமானால், கீரி சம்பாவுக்கான மாற்று அரிசி வகையான ‘GR11’ இல் 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படும்.

பொலன்னறுவையின் களஞ்சியசாலைகளில் மட்டும் 85,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.
அதில் ஒரு தொகை சந்தைக்கு விடுவிக்கப்படுமானால், இந்த பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்.

இல்லை என்றால் வௌிநாடுகளில் இருந்து கீரி சம்பாவை இறக்குமதி செய்யவே நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment