மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றைய தினம் (13) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கலந்துரையாடலில் ”மன்னாரில் மக்களின் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இ வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள்குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பதுதொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத்திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த காற்றாலைத் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.


