TamilsGuide

இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமை அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றால் வருந்தத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளம் காண்பதிலும், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாது இலங்கையில் நடைபெறும்   தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், விளக்கமறியலில் இருக்கும் வேளை இடம்பெறும்  மரணங்கள் , ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும்  அமெரிக்க இராஜாங்க திணைக்களம்  கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பொலிஸ் காவலில் 7 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டில் பதிவாகவில்லை என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment